பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஏப்.,14ம் தேதி முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்வி துறையை கவனித்து வரும் அமைச்சர் பெக்ரியால், மத்திய பல்கலைகழங்களை சேர்ந்த துணை வேந்தர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாவினர்.


பெக்ரியால் கூறியதாவது: மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பு அரசுக்கு மிகவும் முக்கியம். கரோனா பரவலின் நிலை குறித்து ஆராய்ந்து, ஏப்.,14ம் தேதிக்கு பின் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நிலைமையை பொறுத்தே விடுமுறை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை ஏப்.,14க்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், மாணவர்களின் கல்விக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டில், 34 கோடி மாணவ, மாணவியர் இருக்கின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். மாணவர்கள் நம் நாட்டின் செல்வங்கள். அவர்களது பாதுகாப்பு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.