நோய்வாய்ப்பட்ட அப்பாவை சந்திக்க 2100 கி.மீ சைக்கிளில் சென்ற மகன்

மும்பை: ஜம்முவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை பார்க்க மும்பையில் இருந்து 2100 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் மகனின் செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால் பணி காரணமாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செக்யூரிட்டியாக பணிபுரியும் முகமது ஆரிப், 36, ஜம்மு காஷ்மீரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருடைய தந்தையை சந்திக்க முடியாமல் தவித்துள்ளார். போக்குவரத்து எதுவும் இல்லாததால், சைக்கிளில் புறப்பட்ட அவர், குஜராத்-ராஜஸ்தான் மாநில எல்லையை அடைந்துள்ளார். அப்போது, குஜராத் மாநில போலீசிடம் தந்தையின் நிலையை கூறியுள்ளார். அவரின் நிலையை உணர்ந்து, சிஆர்பிஎப் உதவியை நாடியது.


சிஆர்பிஎப் வீரர்கள், ஆரிப்பின் தந்தையை ஹெலிகாப்டர் மூலமாக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து, ஏடிஜி சிஆர்பிஎப் சுல்பிகர் ஹசன் அளித்த பேட்டி: தந்தைக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த ஆரிப்பை பரோடாவிலிருந்து அழைத்துச் சென்றோம். அவரது தந்தையை கவனித்துக்கொள்வதாக நாங்கள் அவருக்கு உறுதியளித்துள்ளோம். மனிதாபிமானத்துடன் அவருக்கு உதவ நாங்கள் முயற்சிக்கிறோம், எனக்கூறினார்.